தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை

IN நிகழ்வுகள் VIEWS 1531

image
Posted On : 26 January 2021

SHARE THIS :

தலைவர் போராளிகளை எப்படி நடத்தினார் பிரிகேடியர் தீபனின் கட்டுரை (தமிழீழத் தேசியத்தலைவரின் ஜம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது) எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே தலைவருடன் அவர் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். பகற் சாப்பாட்டு நேரம் வந்தது. தலைவரது பாசறைப் போராளிகளுள் ஒருவர் உணவுக்காக எங்களை அழைத்தார். நாங்கள் உண்ண ஆரம்பித்தவுடன் அந்த மேசைக்குத் தலைவர் வந்தார். எல்லோரது உணவுத்தட்டுக்களையும் பார்த்துக்கொண்டு வந்தவர், என்னைச் சுட்டிக்காட்டி “இந்தத்தம்பிக்கு மீன் பொரியல் வைக்கவில்லை” என்று சொன்னார். பரிமாறும்போது அது தவறவிடப்பட்டதை நான் கவனிக்கவில்லை. அத்துடன் அதுவொரு சிறுவிடயம். அதைத் தலைவர் சுட்டிக்காட்டித் திருத்தியது எனக்கு ஒரு பக்கம் வியப்பாகவும் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தலைவர் என்று இருப்பவர் இப்படியெல்லாம் போராளிகளது உணவு விடயத்திற் கூட அக்கறையாக இருப்பாரா! என்று நான் வியந்தேன். அதுவே எனக்கு இனம்புரியாத மகிழ்ச்சியையுமளித்தது. ஒரு பொரியல் தவறவிடப்பட்டதையே கூர்மையாக அவதானித்தறிந்து திருத்திய பாங்கு என்னைக் கவர்ந்துவிட்டது. போராளிகளைப் பேதமில்லாமல் நடாத்துவதும் அன்பாகக் கவனிப்பதும் அவர்களது நலனில் அக்கறைப்படுவதும் தலைவரது இயல்புகளிலொன்று என நான் பின்னர் கண்டுகொண்டேன். அந்த முதல் நிகழ்ச்சி – தலைவரை முதன்முதலில் கண்டபோது நடந்த சம்பவம் – எனது மனத்திற் பசுமையாகப் பதிந்துவிட்டது. ஆனையிறவுச்சமர் (1991 ஆ.க.வெ சமர்) முடிந்த பின்னர் எதிரிப்படைகள் டாங்கிகளை அதிகம் பயன்படுத்தினர். டாங்கியின் உறுமற்சத்தமும் – அது சுட்ட நீண்ட குண்டுகளும் போராளிகளது மனவுறுதியைக் குலைத்தன. வெற்றிகொள்ள முடியாத ஓர் ஆயுதந்தான் டாங்கி என்ற எண்ணம் எங்களுக்குள் வேகமாகப் பரவியது. இதனை நன்கு அவதானித்த தலைவர் அவர்கள், டாங்கியின் இயக்கம் பற்றிய அறிவுகளை – அது பற்றிய பலம், பலவீனங்களைத் தளபதிகளுக்குக் கூறத் தொடங்கினார். டாங்கியை “கண்கள் இல்லாத கவசம்” என்று விளங்கப்படுத்தினார். டாங்கிகள் பற்றித் தலைவர் எனக்கு கூறியவற்றை நான் போராளிகளுக்குச் சொன்னேன். “இரவு நேரங்களில் டாங்கியைப் பிடிப்பது சுலபம்” என்று காரணம் சொல்லி விளக்கினார். அவரது அறிவுரைகளும் விளக்கங்களும் டாங்கிகளை அழிப்பதற்குச் சொல்லித்தந்த வழிமுறைகளும் எனக்கும் போராளிகளுக்கும் மிகுந்த தன்னம்பிக்கையூட்டின. அந்தக் காலப்பகுதியில் “யாழ்தேவி” இராணுவ நடவடிக்கையை எதிரி ஆரம்பித்தான். ஆனையிறவுத் தளத்திலிருந்து கடல் நீரேரிக் கரையோரமாகக் கிளாலி நோக்கி டாங்கிகளுடன் எதிரி நகர்ந்தான். அதைப் புலோப்பளைப் பகுதியில் வழிமறித்து ஒரு எதிர்த்தாக்குதலை நடாத்தும்படி தலைவர் எனது அணியையும் அனுப்பினார். எமது தாக்குதலின் பிரதான இலக்காக டாங்கிகளைத் தெரிவுசெய்தோம். காலைச் சண்டையில் எதிரியின் இரு டாங்கிகளையும் ஒரு பவள் கவச வாகனத்தையும் அழித்துக் கைப்பற்றினோம். திகைப்படைந்த எதிரிப்படை நடவடிக்கையைக் கைவிட்டு ஆனையிறவுக்கே திரும்பிச்சென்றது. தலைவர் தந்த அறிவுரைகளும் விளக்கங்களும் – அவர் ஊட்டிய தன்னம்பிக்கையுமே டாங்கிகளை அழித்து – எதிரிப்படையெடுப்பை முறியடிக்க எங்களுக்குதவின. சண்டை முடிந்ததும் நான் தலைவரைச் சந்திக்கச் சென்றேன். தலைவர் “நான் இரவில் டாங்கிகளைப் பிடிப்பது சுலபம் என்றேன். ஆனால், நீங்கள் பகலிலேயே அவற்றைப் பிடித்துவிட்டீர்கள்” என்று சொல்லிப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். இவ்விதம், சாதனை செய்யும்படி உற்சாகப்படுத்துவதும் அதற்கான செயல்வீரத்தை வெளிப்படுத்த எங்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதும் – சாதனை செய்யப்பட்டால் அதை மனந்திறந்து பாராட்டுவதும் தலைவரின் இன்னொரியல்பு. இராணுவத் திட்டமிடலிலும் – வியூகம் வகுப்பதிலும் தலைவர் ஒரு மேதைதான். சண்டைகளைத் திட்டமிடும்போது தலைவர் ஓர் அசாதாரண ஆற்றலை வெளிப்படுத்துவதை நான் நேரடியாகவே பல தடவைகள் கண்டுள்ளேன். யாழ்ப்பாணத்தைவிட்டு வன்னிக்குப் பின்வாங்கிய பின் (1996) நாங்கள் வெற்றிகரமான ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தோம். அப்போது என்னைக்கூப்பிட்டு முல்லைத்தளத்தை மிகக்குறுகிய காலத்தில் வேவு பார்த்து முடிக்க வேண்டுமென்பதையும் முக்கியமாக ஆட்லறி இருக்குமிடங்கள், முகாமின் கட்டளையிடங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக எடுக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தினார். “எனக்கு முன்னணி வேலி முக்கியமில்லை” என்றார். அதன்படி நாங்கள் வேவுத் தகவல்களைத் திரட்டி முடித்தோம். தளத்தைத்தாக்கி அழிக்கும் திட்டத்தைத் தலைவர் வரைந்துகொண்டிருந்தார். அன்றைய நாளில் திட்டமிடலின் முக்கிய விடயமொன்றைத் தலைவர் எனக்குச் சொன்னார். “சாதகமான விடயங்களிற்குத் திட்டமிடுவதைவிடப் பாதகமான விடயங்களிற்குத் திட்டமிடுவது முக்கியம்” என்றார். உண்மையில் முல்லைத்தள அழிப்புத்திட்டம் நாம் பலவீனமாக இருந்தபோது வரையப்பட்டது. அதில் நாம் வெற்றியை அடையவேண்டும் என்பதில் தலைவர் அதீத கவனம் செலுத்தினார். முறை ஒன்று, முறை இரண்டு, முறை மூன்று என மூன்று வகையான தாக்குதல் திட்டங்களை வரைந்தார். ஒன்று தவறினால் இரண்டு. அதுவும் பிழைத்தால் மூன்று என மாற்றுத்திட்டங்கள் வரையப்பட்டன. “தளத்தின் கடல் முனைகளை முழுமையாக மூடுங்கள் தளம் தானாக விழும்” என்றார். அவர் கூறியபடி நாம் செய்தோம். தளம் எமது கைக்குள் வீழ்ந்தது. எதிரிப்படைத்தளத்தின் உயிர்நாடியைக் கண்டறியும் ஆற்றல் தலைவருக்குண்டு. இவ்வாறு எதிரி முகாம்களின் உயிர்நிலைகளைக் கண்டறிந்து – அதற்கேற்பத் தலைவர் தீட்டிய திட்டங்கள் பலவற்றை எமது இராணுவ வெற்றிகளில் நாம் பார்க்கலாம்.சண்டைகளின்போது நாம் அறியாமல் விடும் இராணுவத் தவறுகளை உன்னிப்பாக அவதானித்தறியும் ஆற்றல் தலைவரிடம் நிறையவேயுண்டு. நாம் விடும் தவறுகள் எங்களது மனத்தில் நன்றாகப் பதியும்படி எளிய உதாரணங்கள் வாயிலாக அவர் விளங்கப்படுத்தும் விதம் அலாதியானது. “ஜெயசிக்குறு”ச் சமர்க்களத்தில் ஒரு நாள் எனது போராளிகள் காவலரண் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென அப்பகுதிக்குட் புகுந்த ஓர் இராணுவ அணியின் திடீர்த்தாக்குதலில் எனது அணி சிக்குண்டு இழப்பைச் சந்தித்தது.அந்தச் சம்பவத்தையறிந்த உடனேயே என்னைத் தலைவர் கூப்பிட்டார். நடந்ததைக் கேட்டார். நான் விளக்கினேன். முடிவில் தலைவர், “குரங்குக் கூட்டமொன்று வீதியைக் கடப்பதைக் கண்டிருக்கின்றாயா? அல்லது அவை தோட்டமொன்றினுட்புகுந்து உணவு தேடுவதைப் பார்த்திருக்கின்றாயா?” என்று என்னைக் கேட்டார். அவ்வாறு அவை செய்யும்போது, பாதுகாப்பிற்காக மூத்த குரங்குகள் காவலிருப்பதை அதுவும் சரியான இடங்களில் – முழு எச்சரிக்கையுடன் காவல் காப்பதை எனக்கு விளக்கினார். “நீங்கள் அரண் அமைக்கும்போது போட்ட காவல்கள் சரியான இடத்தில் முறையாகப் போடப்படவில்லை, அதனால்தான் எதிரி இரகசியமாக நகர்ந்து நுழைந்ததை நீங்கள் காணவில்லை” என்று எமது தவறுகளைச் சுட்டிக்காட்டி எங்களை நெறிப்படுத்தினார். அவர் கூறிய குரங்குகளின் உதாரணமும் மனத்திற்படும்படி அவர் கூறிய விதமும் இன்றுவரை என் மனத்திலுள்ளன. போர் நடவடிக்கைகளின்போது நாம் எத்தனையோ பின்னடைவுகளைச் சந்திக்கின்றோம். அப்படியான வேளைகளிலும் தலைவர் சோர்ந்து போய்விடமாட்டார். தளபதிகளையும் போராளிகளையும் சோரவிடமாட்டார். இதற்கு எனது சொந்த அனுபவத்தின்படி, கிளிநொச்சித்தளம் மீது நடந்த முதலாவது தாக்குதல் நல்ல உதாரணம். அத்தாக்குதல் வெற்றிபெறவில்லை. கூடுதலான போராளிகளை அதிலிழந்தோம். அத்துடன் ஒரு தொன் வெடிமருந்தும் வீணாகியது. தாக்குதல் தோல்வியால் நான் யோசித்தபடி தலைவரைச் சந்திக்கச் சென்றேன். அதை அவதானித்துவிட்டு “நீ அடுத்த, வேவுத் தகவல்களைக் கொண்டு வா, நான் ஒரு தொன் அல்ல 10 தொன் வெடிமருந்து தேவையென்றாலும் தருகின்றேன்” என்று சொன்னார். ஏசப்போகின்றார் என்று பயந்தபடியும் தோல்வியாலும் இழப்பாலும் துவண்டபடியும் சென்ற எனக்குத் தலைவரின் வார்த்தைகள் புத்துணர்ச்சி தந்தன. தலைவரிடம் அந்தளவு தொகை வெடிமருந்து அப்போதிருக்கவில்லையென்பது எனக்கு நன்றாகத்தெரியும். ஆனாலும் அவர் எனக்குத்தந்த தெம்பூட்டல் என்னை வெகுவாக உற்சாகப்படுத்தியது. தாக்குதலில் என்ன நடந்தது என்று பின்னர் கேட்டார். அந்தத் தவறுகளைத் திருத்தித் தலைவர் போட்ட அடுத்த திட்டம் தான் “ஓயாத அலைகள் 2” எனப் பெயரிட்டு கிளிநொச்சித்தளத்தை நாம் கைப்பற்றிய வெற்றித்தாக்குதலாகும். தலைவருடன் நான் பழகிய நீண்ட அனுபவத்தைக்கொண்டு என்னால் ஒரு விடயத்தைக்கூறமுடியும். அது தலைவரின் அற்புதமான தன்னம்பிக்கையும் உள்ளுணர்வும் சம்பந்தமானது. பல சந்தர்ப்பங்களில் அதுவும் நெருக்கடி வேளைகளில் இராணுவ ஞானம்மிக்க அவரது தன்னம்பிக்கையும் உள்ளுணர்வும் எமக்கு எத்தனையோ இராணுவ வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளன. இந்தியப் படையுடனான போரும் அப்படியானதொன்றுதான். எனது அனுபவம் “ஜெயசிக்குறு” சமருடன் சம்பந்தப்பட்டது. மாங்குளம் – கரிப்பட்டமுறிப்பு – ஒட்டுசுட்டான் என்று படையினர் பிடித்தனர். அம்பகாமத்தின் அரைவாசியையும் பிடித்தனர். அடுத்தது புதுக்குடியிருப்பா? கிளிநொச்சியா? என்ற அச்சம் எழுந்த நேரமது. தலைவர் தளபதிகளைக் கூப்பிட்டார். “இனித்தான் சண்டை ஆரம்பிக்கப் போகுது, கொஞ்ச நாளைக்குள் என்ன நடக்குமென்று பாருங்கோ” என்றார். வேலைகளை எல்லாத் தளபதிகளுக்கும் பிரித்துக்கொடுத்துத் திட்டத்தைச் சொன்னார். என்னிடம் சிறு தொகைப் போராளிகளை ஒப்படைத்து “நீ இவர்களை வைத்து ஒட்டுசுட்டானில் இருந்து மன்னார் வரையான காவலரண்களைப் பார்” என்றார். நான் திகைத்துப்போனேன். அதை அவரிடம் சொன்னேன். அவர், “இராணுவம் இன்னும் முன்னேற முயன்றால் நீ அவர்களை உள்ளே விடு. மிகுதியை நான் பார்க்கிறேன்” என்று சொன்னார். “எமது தாக்குதல் ஆரம்பிக்கும் இரவு அம்பகாமத்தில் உனது கட்டளை நிலையத்திற்கு வந்து தாக்குதலின் ஒரு முனையை வழிநடத்து” என்றும் கூறினார். வன்னி வரைபடத்தைத் தொட்டுக்காட்டி “இன்னும் கொஞ்சநாளில இந்தளவு இடத்தையும் நாங்கள் பிடிக்கப்போறம்” என்று ஒரு பெரும்நிலப்பகுதியை எனக்குக் காட்டினார். “இவ்வளவு இடத்தையும்” என்றார். அவர் காட்டிய அப்பெருநிலப்பகுதியை அப்போது எம்மிடம் இருந்த பலத்தை வைத்து எப்படி பிடிக்கமுடியும். அவர் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. அந்தளவுக்கு அவர் கூறியது சாத்தியமாகுமா? என்று யோசித்தேன். அதை நான் அவருக்கு கூறவில்லை. நான் புறப்பட ஆயத்தமானேன். “நான் உன்னைக் கூப்பிட்டதும் சண்டை செய்யக்கூடியவாறு உனது அணியைத் தயாராக வைத்திரு” என்றார். சில நாட்களில் ஒட்டுசுட்டான் மீது தாக்குதல் தொடங்கியது. அது பின்னர் விரிந்து பரந்து தலைவர் முன்னர் எனக்குச் சொன்னதுபோல நெடுங்கேணி, புளியங்குளம் றோட்டையும் கடந்துமுன்னேறி நிலம்மீட்ட “ஓயாத அலைகள் 3” தொடர்ச்சமராக வரலாற்றிற் பதிந்துவிட்டது. தலைவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்கும் – வியப்புக்கும் காரணமாக இவ்வாறு நூறுக்கும் மேற்பட்ட சம்பவங்களைக் கூறமுடியும். போராளிகள் மீது அவர் காட்டும் பரிவு உண்மையானது. தோல்விகளால் அவர்கள் துவண்டுவிடாமற் பார்ப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுவார். “வெற்றிகளைப் போராளிகளுக்குக் கொடுங்கள், தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தளபதிகளுக்குச் சொல்லவார். “ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்” என்று கூறுவார். ஒரு சண்டை பின்னடைவைச் சந்தித்தால் தவறுகளை ஆராயும் போது முதலில் தன்னிலிருந்துதான் தொடங்குவார். மற்றவர்களிற் பிழைகளைப் போடுவது தலைவர் விரும்பாததொன்று. இலட்சியத்தையும் – அதற்கான சாவையும் தலைவர் இரண்டு கண்களைப் போலவே போற்றுவார். “உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறுவார். “இப்படிப்பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் – உயர்ந்தவர்கள்” என்பார். “நானும் உண்மையானவனல்லன்” என்று தன்னைப் பற்றியுங் கூறுவார். அவரது இக்கூற்றுக்கள் மாவீரர்களை முதன்மைப்படுத்துவதையும் – இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டையுமே காட்டுகின்றன. தலைவர் பிரபாகரன் அவர்கள் அற்புதமான இராணுவ வல்லுநரென்பதை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. அடிமைப்பட்டுத் தலைகுனிந்து கிடந்த தமிழ் இனத்திற்கு வீரத்தையூட்டித் தலைநிமிரவைத்த வரலாற்றுப்பெருமை தலைவரை மட்டுமே சாரும். இன்று, தமிழரின் தன்னிகரில்லாத் தலைவனாக அவர் உயர்ந்துள்ளார். அவரின் காலத்தில் நானும் வாழ்கின்றேன். அவரின் வழிகாட்டலில் நானும் போராட்டப்பணி செய்கின்றேனென்பதே எனக்கிருக்கும் மகிழ்ச்சியும் – திருப்தியுமாகும். இத்தகைய அற்புதமான தலைவன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து – தமிழீழ இலட்சியத்தையடைந்து – எமது இனத்திற்கொரு நிரந்தர விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அவரின் இந்த 50 ஆவது அகவை நிறைவில் வாழ்த்துகின்றேன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” பிரிகேடியர் வே.தீபன் கட்டளைத் தளபதி,வட போர்முனை