தமிழீழ தேசியக் கொடி

உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.

தமிழீழ தேசிய விலங்கு சிறுத்தை

சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு.

தமிழீழ தேசியப் பூ காந்தாள்

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

தமிழீழ தேசியப் பறவை செண்பகம்

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன.

தமிழீழ தேசிய மரம் வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.