mobileicons

தமிழர் நினைவேந்தல் அகவம் -சுவிஸ்

Tamilar Rememberance Foundation

24th February 2020

மகளிர் படையணிக்கு தேசியத் தலைவரின் வாழ்த்து செய்தி....

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம்.

போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றை துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம். எனவே போர்க்களத்தில் அளப் பெரும் தியாகங்களையும். சாதனை களையும் படைத்த பெண்போராளிகளே இப்பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாளாக என்னிடம் இருந்த பேரவா.

எனது பேரவாவுக்கு விருந்தளிக்கும் மாலதி படையணியின் வெளியீடாக நெஞ்சையுறைய வைக்கும் பல்வேறு சமர்களின் தொகுப்பாக பெண் போராளிகளது வீரத்தையும் விவேகத்தையும் பறைசாற்றும் வரலாற்றுப் பதிவேடாக இந்நூல் வெளிவருவது பெரும் மகிழ்வைத்தருகிறது.


உலகிலே சரிபாதியினர் பெண்கள். எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் எமது
போராட்டத்தில் பங்குபெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப் படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேச விடுதலையும் முழுமைபெறாது. ஆனால அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துக்கள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதிசமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையும் சாதியக் கட்டமைப்புக்களும் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுப்பப்பட்டிருந்தது. அது சுயசிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கின்றோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் எம்மண்ணில் என்றுமில்லாதவாறு தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்திப் பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே எமது விடுதலைப் போராட்டத்திற் பெண்களையும் அணி சேர்ப்பதனூடாக படிப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும் தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என நான் உறுதியாக நம்பினேன். இவ்வாறு தான் எமது போராட்டத்திற் பெண்புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைபலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கின்றார்கள்.


ஒருநூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி புரட்சிகளை நடத்தி விவாதங்கள் புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றையும் விட எமது பெண்புலிகள் மிகவும் குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளும் சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றார்கள். சமூக கருத்துலகின் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும் பெண்ணும் சமமான ஆற்றலுடனேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உடற்கூற்றியல் நிபுணர்களின் கூற்றுக்கு பெண்புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கின்றார்கள்.

புரட்சிப் புலிகளாகக் களமிறங்கியுள்ள எமது பெண்புலிகள் எத்தகைய துன்பங்களையும் சுமந்து எத்தகைய நெருக்கடிகளைம்; சமாளித்து எத்தகைய ஆபத்துக்களையும் எதிர்கொண்டு போராடுகிறார்கள். அசைக்கமுடியாத மனவுறுதியும் அதனால் பிறக்கும் துணிவும் அவர்களிடம் உள்ளன. அபாரமான சகிப்புத்தன்மையும் தளராத உறுதியும் கடும் உழைப்பும் கொண்டவர்கள் அவர்கள்.

அவர்கள் தரையில் மட்டுமல்லாது கடலிலும் சண்டை செய்கிறார்கள். கடற்போர்க்கலை மிகவும் நுட்பமானது. அதற்கு நிறையப்பயிற்சியும் அனுபவமும் தேவை. கடல் சதா அசைந்து கொண்டிருக்கும். அதன் முதுகில் சவாரிசெய்து கொண்டு சண்டை யிடுவது மிகவும் கடினமானது. எமது பெண்புலிகள் மீன்குஞ்சுகள் போலக் கடலோடு வாழப் பழகி விட்டார்கள்.



இந்தப் பெண் போராளிகளை அவர்களது போராட்ட வாழ்க்கையை அவர்களிடையே நிலவும் ஆழமான புரிந்துணர்வை அளவிட முடியாத அன்புறவை இந்நூல் அழகு தமிழில் எளிய நடையில் மிக நுட்பமாக வெளிப்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கூடாக மாலதி படையணியின் வரலாறு சொல்லப்படும் பாங்கு சிறப்பாக அமைகிறது. மேலும் பெண்புலிகளது போரனுபவத்தை மாலதி படையணியின் சண்டையனுபவத்துடன் பின்னிப் பிணைத்து பெண்புலிகளது வரலாறு இந்நூலில் அழகாகப்படைக்கப்பட்டிருக்கிது. இந்நூலின் ஆக்கத்துக்கு அயராது உழைத்த மாலதிபடையணிப் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு இந்நூல் சிறப்புடன் வெளிவர எனது நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து….…!

Prev Post

Next Post