இசைப்பிரியாவின் துயிலறைக் காவியம்
***
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றைச் செதுக்கிய சிற்பிகளாக எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இறையோர் மாவீரர்கள். பல்வேறுசூழ்நிலைகளில், பல்வேறு களங்களில் வேறுபட்ட பணிகளில் தாய்மாண்ணுக்காகத் தம்மை ஈந்தவர்கள். 2009ம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் காலங்காலமாகச் சிங்கள அரசினாலும் உலக வல்லரசுகளாலும் தமிழருக்கெதிராக நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற வன்கொடுமைகள், இனவழிப்புச் செயற்பாடுகள் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் நித்தம் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும். தமிழரெம் வாழ்வுக்காகத் தம்மைக்கொடுத்த உன்னத மனிதர்கள் எம்முள்ளே விடுதலைத் தாகத்தை வலுப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். அவர்களின் வாழ்க்கைத்தடங்கள் எமது அடுத்தடுத்த தலைமுறைக்கான பாடங்களாகும்.
அந்தவகையில் எனது அன்புத்தோழி இசைப்பிரியாவின் வாழ்க்கைப்பயணத்தை இங்கே பதிவுசெய்ய விளைகிறேன். இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் திருதிருமதி தர்மராஜா வேதரஞ்சனி இணையருக்கு மகளாக 02.05.1981 அன்று பிறந்தவள். சோபனாவுக்கு மூன்று அக்காக்களும் ஒரு தங்கையும் உள்ளனர். சோபனா பிறந்த சில ஆண்டுகளில் அவளின் குடும்பம் யாழ்ப்பாணம் சென்று வசித்து வந்தது.
சோபனா தனது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி சென்திரேசா, கல்வியன்காடு ஆரம்பப்பாடசாலை மற்றும் OLR என்றழைக்கப்படும் யாழ் புனித அடைக்கலமாதா பாடசாலை போன்ற தொடக்கப்பள்ளிகளிலும் கற்றுப் பின்னர் மானிப்பாய் மெமோறியல் கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலைகளிலும் தனது கற்றலைத் தொடர்ந்தாள். சிறுவயதிலிருந்தே படிப்பில் அவள் கெட்டிக்காரியாகத் திகழ்ந்தாள். அதுமட்டுமல்லாது நல்ல பல பண்புகளையும் தன்னிடத்தே கொண்டிருந்தாள்.1995 ம் ஆண்டு இலங்கைப்படைகளின் யாழ். சூரியக்கதிர் நடவடிக்கையின்போது அவளது குடும்பம் வன்னிக்கு இடம்பெயர்ந்தது. அதன்பின்பு மல்லாவி மத்தியகல்லூரியில் க.போ.த சாதாரணதரத்தைக்கற்றுத் தேர்விற் சித்தியடைந்த சோபனா அங்கேயே க.போ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவில் தனது கல்வியை உற்சாகத்துடன் தொடர்ந்தாள். தொடர் இடப்பெயர்வுகளின்போது வெவ்வேறு பாடசாலைகளில் படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதும் கல்வியில் சோபனாவுக்கிருந்த ஆர்வம் குன்றவில்லை.மாறாக நல்லூக்கத்துடன் கற்றாள்.அதுமட்டுமன்றிஅவள் பல்துறை ஆற்றல்கள் நிறைந்ததொரு மாணவியாக விளங்கினாள். நடனப்போட்டிகள், பேச்சுப்போட்டிகள், கவிதைப்போட்டிகள் என அவள் ஏறாத மேடைகளில்லை எனலாம். பாடசாலைகளுக்கிடையிலே நடைபெறும் தமிழ்த்தினப் போட்டிகளில் அவளை நிச்சயமாகக் காணலாம். விளையாட்டுப்போட்டிகளும் மிச்சமில்லை, அதிலும் சிறந்த வீராங்கனையாக மிளிர்ந்தாள். எப்பொழுதும் துருதுருவெனெச் சுறுசுறுப்பாகவே காணப்படுவாள். ஒருமுறை அவளைப்பார்த்தால் மீண்டும் பார்க்கத்தோன்றும் வசீகரமான அழகிய குழந்தை முகம் அவளது.
இதேவேளை, எமது விடுதலைப்போராட்டம் மக்களாதரவுடன் எழுச்சிப்பாதையில் வீறுகண்டிருந்தது. இச்சூழ்நிலையானது இளந்தலைமுறையினர் போராட்டக் களத்திற் குதிக்கும் நிலைமையை உருவாக்கியது. அது காலத்தின் தேவையாகவுமிருந்தது. சோபனாவின் குடும்பத்தினரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் நல்கி வந்தனர். 1997ம் ஆண்டு சோபனாவின் தங்கை போராடப்புறப்பட்டுப்போனாள். மேஜர் சோதியா படையணியின் போராளியாகக் களத்திலே நின்றாள். சிங்கள அரசின் பொருளாதாரத்தடைகளையும்,இடைவிடா இடப்பெயர்வுகளையும்,மக்களின் அவலச்சாவுகளையும் கண்டு பொறுக்கமுடியாதவளாகத் தன் கடமையை உணர்ந்து 09.11.1998 அன்று தமிழீழவிடுதலைப் போராட்டத்தோடு சோபனா தன்னையும் இணைத்துக்கொண்டாள். அப்போது சோபனா இசைப்பிரியாவானாள். தொடக்கப்பயிற்சிப்பாசறையில் அவள் பயிற்சிக்குத் தயாராயிருந்த வேளை நிகழ்த்தப்பெற்ற மருத்துவப்பரிசோதனையில் அவளின் இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இவ்விடயம் இசைப்பிரியாவுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் அவள் அதனைப் பொருட்படுத்தவில்லை. பயிற்சிக்குத் தயாராகிவிட்டாள். ஆயினும் கடுமையான பயிற்சிகள் எடுக்கமுடியாத நிலையில் அவள் மருத்துவப்பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டாள். பின்னர் அவளது தோற்றம் மற்றும் ஆற்றல்களால் அவள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவான "நிதர்சனம்" நிறுவனத்திற் பணியாற்றப் பெரிதும் பொருத்தமானவள் எனக்கருதப்பட்டு நிதர்சன மகளிர்பிரிவிற்கு அழைத்துவரப்பட்டாள். அங்கே அவளின் செயற்பாடுகள் மூலம் தனது பன்முகத்திறன்களை வெளிப்படுத்தினாள். அவளைப்போலவே அவளது ஒவ்வொரு செயல்களிலும் அழகு நிறைந்திருந்தது.
நிதர்சனம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மாதாந்த ஒளிச்சஞ்சிகையான ஒளிவீச்சின் நிகழ்ச்சி அறிமுகம், நிகழ்ச்சித் தொகுப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு, நிகழ்ச்சிக்குக் குரல் வழங்குதல், செய்தி எழுதுதல், செய்தி வாசித்தல், படத்தொகுப்பு, நேர்காணல்களைமேற்கொள்ளல் எனப் பலதரப்பெற்ற பணிகளை அவள் மேற்கொண்டாள். மாவீரர்களின் வரலாறுகளை எழுதிக் குரல்கொடுத்துக் காட்சிப்படுத்தித் "துயிலறைக்காவியம்" எனும் பெயரில் அவளால் தயாரிக்கப்பெற்ற நிகழ்ச்சி பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அந்நிகழ்ச்சியூடாகப் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் அவள் கதாநாயகி ஆகிவிட்டாள். தொடர்ந்து, நடிப்புத்துறையில் அவளின் ஆற்றல் குன்றில் விளக்காக ஒளிரத் தொடங்கிற்று.
பாடல்களுக்கான காட்சிகள், குறும்படங்கள், முழுநீளப்படங்கள் என அவள்தன் நடிப்பாற்றலால் அனைவராலும் பாராட்டப்பெற்றாள். "வேலி" எனும் குறும்படமும் "ஈர்த்தீ" எனும் முழுநீளப்படமும் அவளின் நடிப்பில் வெளியானவையே. "கட்டுமரம் மேலே ஏறி"என்ற கடற்கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு ஒரு மீனவனின் மனைவியாக நடித்திருந்தமை பெரு வரவேற்பைப் பெற்றது."நேற்றுவரை சந்தனமானாய்"என்ற கரும்புலிப்பெண்போராளியை நினைவுகூரும் பாடலின் காட்சியமைப்பில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாள் இசைப்பிரியா .
2006ம் ஆண்டளவில் நிதர்சனப் பெண் போராளிகளுடனான தலைவர் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. அப்போது போராளிகள் பலரின் கலையாற்றல்கள், ஆளுமை வெளிப்பாடுகள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களாற் பாராட்டப்பெற்றன. அச்சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட "கட்டுமரம் மேலே" என்ற பாடலின் காட்சிகளில் இசைப்பிரியாவின் நடிப்பைப்பற்றித் தலைவர் வியந்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு வேலி படத்திற்காகவும் பாராட்டப்பெற்றாள். இன்னும், பலதரப்பெற்ற அவளது சிறந்த பணிகளுக்காகவும் அவ்வப்போது அவளுக்குப் பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன.
ஏலவே நடனத்திலிருந்த தேர்ச்சியும் விருப்பும் காரணமாகப் பாடல்களின் நடனக்காட்சிகளிலும் அவளைப் பார்க்கக்கூடியதாகவிருந்தது. "தாய்மண்ணே உனக்கு எங்கள் வணக்கம்", "உயிர் கொடுத்த தோழர்களின்", மற்றும் "நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச்சூட்டுங்கள்" போன்ற புரட்சிப்பாடல்களுக்கு வேறு சிலருடன் இணைந்து அழகாக நடனமாடியுள்ளாள். இன்னும், "மாவீரர் தோடயமங்களம்" எனும் உருப்படிக்கு பக்கவாத்தியங்களின் நேரடி இசையுடன் கூடிய நட்டுவாங்கத்துடன் இன்னும் இரு போராளிகளுடன் இணைந்து தமிழீழத் தேசியத்தலைவர் முன்னிலையில் நடனமாடியபோது பெருமிதமடைந்தோம். அந்நடனம் பின்னர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
இசைப்பிரியாவுக்கு உணவுவகைகளில் அதிகம் பிடித்தது "நூடில்ஸ்". அத்துடன் பலாப்பழம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். "குளிர்களி" (ஐஸ்கிரீம்) என்றால் அவள் சிறுபிள்ளையாகவே மாறிடுவாள். அவ்வளவு விருப்பம். ஆனால் 2004 மார்கழி மாதம் ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தத்தினால் மக்கள்பட்ட அவலங்களைத் தாங்க முடியாதவளாய் அப்போதிருந்து தனக்குப்பிடித்தமான குளிர்களி உண்பதை நிறுத்தி விட்டாள். அவள் மிகவும் மென்மையான குணம்படைத்தவள்.
2003ம் ஆண்டு தொடக்கம் நிதர்சனப் பெண்கள் பிரிவின் அறிக்கைப் பொறுப்பையேற்றுத் தெளிவாகவும் ஒழுங்காகவும் பதிவுகளை மேற்கொண்டது மட்டுமல்லாது கோப்புகளைச் (Files) சரியாக வகைப்படுத்தி உரிய விடயங்களை உடனுக்குடன் பார்வையிடவும் பயன்படுத்தவும்கூடியவாறு நிர்வகித்தாள். எந்தச் செயற்பாட்டிலும் ஒரு நேர்த்தியைக் கடைபிடிக்கும் பண்பு அவளிடமிருந்தது. மேலும், எல்லோரிடத்திலும் அன்புகலந்த கனிவுடன் பேசுவாள். அவளது குரல் இயல்பிலேயே இனிமையானதுங்கூட. உடன் பணியாற்றும் அனைவரும் இவளுடன் நட்பாகவே இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னிற்பாள் இசைப்பிரியா. தனது நற்குணங்களால் அனைவர் மனங்களையும் வென்றவள்.
2005ம் ஆண்டின் பின் நிதர்சனத்தின் ஒளிபரப்புச்சேவை தமிழீழத் தேசியத் தோலைக்காட்சியாகப் பரிணாமம்பெற்றது. இதன்போது செய்திப்பிரிவின் பொறுப்பாளராகத் தனது பணியில் நல்ல ஆளுமையை வெளிப்படுத்தினாள். தனக்கு வழங்கப்படும் வேலைத்திட்டங்களைச் சிரத்தையோடு சரியாக நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்படுபவள் இசைப்பிரியா என்பது அவளின் தோழிகளுக்கு நன்கு தெரியும்.
அவளது வாழ்வின் அடுத்தபடியாக, கடற்புலிகளின் தென்தமிழீழக்க் கட்டளைத் தளபதியாகவிருந்த திரு சிறீராம் அவர்களைக் காதலித்து 08.02.2006 அன்று திருமணம் செய்து கொண்டாள். திருமணமான சிலநாட்களில் தென்தமிழீழக்களமுனைகளில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் பொருட்டு இசைப்பிரியாவின் கணவர் மடடக்களப்பிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, கவலையை மனதிற்குட் புதைத்தபடியே தாயகக் கடமையை முன்னிறுத்தி ஒரு புலிமகளாக நின்று கணவரை வழியனுப்பிவைத்த அந்தச் செயல் வார்த்தையால் வர்ணித்துவிட முடியாத ஒன்று. தனது திருமண வாழ்வு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே தனக்கிருக்கும் கடமைகளை எந்த வகையிலும் பாதிக்காதவாறு அவள் தன்னை உறுதியாக்கிக் கொண்டாள்.
கடுமையான குண்டுத் தாக்குதல்களின் மத்தியில் , 18.10.2008 அன்று சிறீராம் இசைப்பிரியா இணையருக்கு ஓர் அழகிய மகள் பிறந்தாள். "அகல்யாழ்" எனப்பெயரிடப்பெற்ற அக்குழந்தை, தாயின் அழகை மிஞ்சியிருந்தது. தாயான இசைப்பிரியா தனது தாயகக் கடமைகளோடும் ஒன்றித்து நின்றாள். போரின் உக்கிரம் தலைவிரித்தாட, மக்கள் பேரவலத்தில் தத்தளித்தனர். எங்கு பார்த்தாலும் காயப்பட்டவர்களின் அலறல்களும் சாவின் கோரமுமாய் உணவு, உறக்கமின்றி அலைந்தனர் மக்கள். போராளிகள் மருத்துவ உதவிகள் முதற்கொண்டு தம்மாலான எல்லா உதவிகளையும் மக்களுக்கு வழங்கினர்.
இவ்வேளை இசைப்பிரியாவின் குடும்பமும் தொடர்ந்த இடம்பெயர்வினால் இடர்பட்டது. இதன்போது போர்ச்சூழலினால் பதுங்குகுழிகளிலேயே கூடுதலான நேரம் இருக்க வேண்டியிருந்ததால் இசைப்பிரியாவின் குழந்தை சளிக்காய்ச்சலால் அவதிப்பட்டாள். நோயின் பாதிப்பு அதிகமாகப் போதிய மருத்துவ வசதியின்றி 15.03.2009 அன்று குழந்தை "அகல்யாழ்" இவ்வுலகைப் பிரிந்தது.
அந்நிகழ்வு இசைப்பிரியாவையும் அவளது குடும்பத்தையும் வெகுவாகப்பாதித்தது. இழப்புகள் ஈடுசெய்யமுடியாதவை. அவற்றினால் ஏற்படும் துயரத்தை வார்த்தைகளுள் அடக்கிவிடமுடியாது. வேதனையிற் துடிக்கும் தாயாக, மக்களின் துன்பங்களையும் கூடவே சுமந்து கடமையே கண்ணாகினாள் அவள். அவள் போரின் இறுதி நாட்களில் சோதியா படையணியின் நிர்வாகச் செயலக உதவியாளராகச் செயற்பட்டாள்.
இலங்கைப் படைகளிடம் இக்கட்டான சூழ்நிலையில் அவள் அகப்படும் வரையிலும் தனக்கிடப்பட்ட பணியைச் செவ்வெனே ஆற்றினாள். மனவுறுதியும் செயற்றிறனும், நற்பண்புகளும் கொண்ட எங்கள் தோழியை நாம் முள்ளிவாய்க்கால் மண்ணிலே பறிகொடுத்துவிட்டோம். ஆனால் எமக்குள்ளே அவள் விடுதலை நெருப்பாக எரிமலைக் குளம்பாகித் தகிக்கிறாள். "நான் ஒரு தமிழச்சி" என்று தன்னை உணரும் ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் அவள் கனவுகள் பதியமிடப்பட்டுவிட்டன. தமிழீழ விடுதலைக்கான பயணம் அவள் நினைவுகளோடு, அவள் கனவுகள் காவி இன்னுமின்னும் வீரியம் கொள்ளட்டும்.
வெல்வது உறுதி
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
கலைமகள்
30.05.2021
© தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் 2021 - 2024 | All Rights Reserved . Powered By Sanishsoft